புரட்டாசி 2025 சனிக்கிழமைகளில் செய்ய வேண்டிய வழிபாடும், தளிகை இடும் முறையும்

புரட்டாசி என்றதுமே அனைவருக்கும் நினைவிற்கு வரும் அடுத்த விஷயம் புரட்டாசி சனிக்கிழமை விரதம் மற்றும் வழிபாடு தான். இந்த நாளில் பெருமாளை வழிபடுவது மிகவும் சிறப்பானதாகும். புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு தளிகையிட்டு வழிபடுவது பலரது வழக்கம். புரட்டாசி மாதத்தின் எந்த சனிக்கிழமையில், எந்த நேரத்தில், எந்த முறையில் தளிகையிட்டு பெருமாளை வழிபட வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.



புரட்டாசி மாதம் முழுவதும் பெருமாள் வழிபாட்டிற்கு சிறப்புக்குரியதாகும். இருந்தாலும் புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகள் மிக மிக விசேஷமான நாளாக கருதப்படுகிறது. புரட்டாசி மாதம் முழுவதும் விரதம் கடைபிடிக்க முடியாதவர்கள், புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் மட்டுமாவது விரதம் இருந்து பெருமாளை வழிபடலாம். இதனால் பெருமாளின் அருள் கிடைப்பதுடன், சனி பகவானால் ஏற்படும் தீய பலன்கள் குறைந்து அவரின் அருளும் கிடைக்கும். புரட்டாசி மாதத்தில், குறிப்பாக புரட்டாசி சனிக்கிழமைகளில் எவர் ஒருவர் விரதம் இருந்து பெருமாளை வழிபடுகிறாரோ அவரை சனி பகவான் துன்புறுத்துவது கிடையாது. மாறாக அவர்களுக்கு நன்மைகளை மட்டும் வழங்குவதாக திருப்பதி ஏழுமலையானிடம் சனி பகவான் வாக்குறுதி அளித்திருப்பதாக புராணங்கள் சொல்கின்றன.

இத்தகைய மகத்துவம் வாய்ந்த புரட்டாசியில் இந்த ஆண்டு நான்கு சனிக்கிழமைகள் வருகின்றனர். செப்டம்பர் 20, செப்டம்பர் 27, அக்டோபர் 04, அக்டோபர் 11 என நான்கு சனிக்கிழமைகள் வருகின்றன. இன்னும் சிலர் ஐப்பசி மாதத்தின் முதல் நாளையும் புரட்டாசி மாதத்தின் கடைசி சனிக்கிழமையாக கணக்கில் எடுத்துக் கொண்டு வழிபாடு செய்வார்கள். அப்படி பார்த்தால், ஐப்பசி முதல் நாளான அக்டோபர் 18ம் தேதியுடன் சேர்ந்து புரட்டாசியில் ஐந்து சனிக்கிழமைகள் வருகின்றன. இவற்றில் இரண்டாவது மற்றும் மூன்றாவது சனிக்கிழமைகளில் நவராத்திரி பண்டிகை வருவது இன்னும் கூடுதல் சிறப்பானதாகும்.

வழக்கமாக புரட்டாசி சனிக்கிழமையில் பெருமாளுக்கு தளிகை இட்டு வழிபாடு செய்பவர்கள் முதல் மற்றும் நான்காவது அல்லது கடைசி வாரத்தில் தான் தளிகை இடுவார்கள். வீட்டில் நவராத்திரி கொலு வைப்பவர்கள் புரட்டாசி மாதத்தின் முதல் மற்றும் நான்காவது வாரத்தில் தளிகையிட்டு வழிபடலாம். கொலு வைக்காதவர்கள் எந்த சனிக்கிழமையில் வாய்ப்பு உள்ளதோ அந்த சனிக்கிழமையில் தளிகையிட்டு பெருமாளை வழிபடலாம். மற்ற சனிக்கிழமைகளில் மாவிளக்கு வழிபாடு, துளசி பூஜை, ராமாயணம் அல்லது சுந்தர காண்ட பாராயணம் ஆகியவை செய்து பெருமாளை வழிபடலாம்.

புரட்டாசி சனிக்கிழமைகளில் பகல் 12.30 முதல் 01.20 வரையிலான நேரத்தில் தளிகை இட்டு வழிபடலாம். பெருமாளுக்கு தளிகையிடும் போது வாழை இலையில் சர்க்கரை பொங்கல், புளியோதரை, நெல்லிக்காய் சாதம், எலுமிச்சை சாதம், தேங்காய் சாதம், தயிர் சாதம், சுண்டல், பாயசம் ஆகியவற்றில் எது முடிகிறதோ அதை படைத்து வழிபடலாம். சிலர் பலவிதமான சாதங்களால் பெருமாளின் உருவத்தை அமைத்து தளிகை இடுவார்கள். இன்னும் சிலர் சாம்பார், கூட்டு, பொரியல், அப்பளம், பாயாசம், வடை என உணவு சமைத்து படையல் இட்டு வழிபடுவார்கள். இவற்றில் யாருக்கு என்ன முறையோ அல்லது எது வசதியான முறையோ அதை பின்பற்றி தளிகையிட்டு வழிபடலாம். புரட்டாசியின் அனைத்து சனிக்கிழமைகளிலும் கோவிந்த நாமம் சொல்லி, சொம்பில் யாசகமாக பெற்ற அரிசியை சேமித்து வைத்து கடைசி வாரத்தில் தளிகை இடும் பழக்கம் சிலருக்கு உள்ளது.

புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளுக்குரிய மந்திரங்களை சொல்லி வழிபடுவதும், அருகில் உள்ள பெருமாள் கோவில், ஆஞ்சநேயர் கோவில், ஹயக்ரீவர் கோவில் உள்ளிட்ட கோவில்களுக்கும் சென்று வழிபடுவது சிறப்பு. புரட்டாசி சனிக்கிழமைகளில் காகம், பசு போன்றவற்றிற்கு உணவிடுவது மிகவும் விசேஷமானதாகும்.




Comments