சரஸ்வதி பூஜை செய்யும் முறை
சரஸ்வதி பூஜையன்று வீடுகளிலும், அலுவலகங்களிலும் பூஜைகள் செய்து வழிபடுவது வழக்கம்.
அவ்வாறு வழிபாடு செய்வதற்கு முன்பு, வழிபாடு செய்யவிருக்கும் இடத்தை தூய்மைப்படுத்த வேண்டும். சந்தனம், தெளித்து குங்குமம் இட வேண்டும்.
சரஸ்வதியின் படத்திற்கும், படைக்கப்பட வேண்டிய பொருட்களுக்கும் சந்தனம் தெளித்து குங்குமம் இடவும். படத்திற்கு பூக்கள் வைத்து அலங்கரிக்க வேண்டும்.
அன்னையின் திருவுருவின் பார்வையில் புத்தகங்களை வைத்து அதன் முன்பாக வாழையிலை விரித்து அதில் படையலுக்காக சமைக்கப் பட்டவைகளை வைக்க வேண்டும்.
சுண்டல், சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, எலுமிச்சை சாதம் போன்றவற்றை கலைவாணிக்கு நைவேத்தியங்களாகப் படைக்கலாம். வாழை இலையை வைத்து அதில் பொறி, கடலை, அவல், நாட்டு சர்க்கரை, பழங்களை வைக்க வேண்டும். செம்பருத்தி, ரோஜா, வெண்தாமரை மலர்கள் அன்னைக்கு உகந்த மலர்களாகும். இவற்றால் மாலைகள் தொடுத்து அன்னைக்கும், அவள் உறைந்திருக்கும் புத்தகங்களுக்கும் அணிவித்தல் வேண்டும்.
எதற்கும் விநாயகரே முழு முதலானவர். எனவே மஞ்சளில் பிள்ளையார் பிடித்து பூஜையில் வைத்து
"சுக்லாம் பரதரம் விஷ்ணும்
சஸிவர்ணம் சதுர்புஜம்!
ப்ரசந்த வதனம் த்யாயேத் சர்வ
விக்நோப சாந்தயே"
- என்று கூறி விநாயகரை வணங்கிய பின்னரே சரஸ்வதிக்கான பூஜையை ஆரம்பித்தல் வேண்டும்.
சரஸ்வதி பூஜையின்போது "துர்க்கா லட்சுமி சரஸ் வதீப்யோ நம" என்று கூறி பூஜையை ஆரம்பிப்பது நன்று.
பூஜையில் கலசம் வைத்தும் கலைவாணியை வணங்கலாம். கலசம் வைத்து அதில் அம்பிகையை முறைப்படி எழுந்தருளச் செய்து பூஜிப்பதால் கூடுதல் நலன் கிடைக்கும்.
பூஜையின்போது வீட்டில் உள்ள குழந்தைகள், பெண்கள் உட்பட அனைவரும் கலைவாணிக்குரிய பாடல்களைப் பாடி வணங்கலாம். சகலகலாவல்லி மாலை பாடல்களை பாராயணம் செய்யலாம்.
நவராத்திரி நாட்களில் அன்னையின் அருள்பெற ஒன்பது நாட்களும் விரதமிருந்து பூஜிக்க இயலாதவர்கள் சரஸ்வதி பூஜையன்று மட்டும் அம்மனை பூஜித்து வணங்கினால் போதும். அம்பிகையின் அருள் பூரணமாய் கிடைக்கும்.
Comments
Post a Comment